Thursday, June 26, 2014

பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...


நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்

25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.

1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.

கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.

நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்;  காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.

பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.

Tuesday, June 17, 2014

25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...

.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

.


பொள்ளாச்சி, ஜூன் 15: பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டும் 1989ஆம் ஆண்டும் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கில் காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துவங்கியது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தின் (என்ஏபிஏஏ- நாபா) கெüரவத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்த  ‘நாபா' தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவைப்பணிகளைப் பட்டியலிட்டார். அலும்னி சங்கத்தின் நன்கொடையால் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.