Thursday, October 4, 2012

எண்ணங்கள்

திருப்பூரில் போலீசால் கொல்லப்பட்ட  மோகன்ராஜின் மனைவி கீதாவும் குழந்தை ரேணுகாவும்

 குழந்தை ரேணுகாவின் அப்பா வருவாரா?

குழந்தை ரேணுகாவுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் பிறந்தநாள். அன்று மகிழ்ச்சிகரமாக இருந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம், ஒப்பாரி வைத்தபடி  நடுத்தெருவில் நின்றது. காரணம் அந்தக் குழந்தையின் தந்தை முதல்நாள் தான் போலீசாரால் கொல்லப்பட்டிருந்தார். அதுவும் நான்கு நாட்கள் லாக்அப்பில் வைத்து போலீசார் நடத்திய கொடூர விசாரணையின் முடிவில். அந்த ஒரு வயதுக் குழந்தையின் அப்பா இப்போது இல்லை. அவரைத் திருமணம் செய்து மூன்று ஆண்டுகளே ஆன மனைவி கீதாவுக்கு ஆறுதல் சொல்லும் துணிவும் யாருக்கும் இல்லை.

இச்சம்பவம் நடந்தது திருப்பூரில். ஆயினும் நாம் ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்ற தத்துவத்தைப் பேசிக்கொண்டே இதுபோன்ற லாக்அப் மரணங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.


போலீசாரால் லாக்அப்பில் கொல்லப்பட்ட இளைஞர் மோகன்ராஜின் வயது 31. அவர் செய்த பாவம் ஏழையாகப் பிறந்தது; பைனான்ஸ் தொழில் நடத்தும் ஆளும்கட்சிப் பிரமுகர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தது. அவர் வேறு வீட்டிற்கு மாறிய மறுநாள் வீட்டின் உரிமையாளர் கொல்லப்பட, சந்தேக வட்டம் மோகன்ராஜ் மீது விழுந்தது.

இவர் மட்டுமல்ல, 30க்கு மேற்பட்டவர்கள் போலீசால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். 4 நாள் லாக்அப் சித்திரவதையின் முடிவில் களப்பலியானார் மோகன்ராஜ். தனது சாவால், போலீஸôரால் சித்திரவதை செய்யப்பட்ட மேலும் பலரைக் காப்பாற்றி இருக்கிறார் மோகன்ராஜ்.

மோகன்ராஜின் மரணம் திருப்பூரை உலுக்கி இருக்கிறது. அதன் விளைவாக, நெடுஞ்சாலையில் 9 மணிநேரம் மறியல் செய்த மக்கள் போலீஸ் அராஜகத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர். வேறு வழியின்றி ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீசாரும் உடனடியாக தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்குக் காரணமான  ஏ.எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் நிலையை அறிந்துவர காவல் நிலையம் சென்ற தம்பி ரமேஷும் போலீசால் இரண்டுநாட்கள் 'விசாரிக்கப்பட்டார்'. அவரது உடல் முழுவதும் ரணம். இந்த ரணம் காலப்போக்கில் ஆறக்கூடும். போலீசால் அநீதி இழைக்கப்பட்ட இவர்களது குடும்பத்தின் மனப்புண் ஆறுமா? குழந்தை ரேணுகாவுக்கு அன்பான தந்தை மீண்டும் கிடைப்பாரா? அரசு அளிக்கும் நிதியுதவிகள் கீதாவுக்கு அன்பான கணவனை மீட்டுத் தருமா? பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மறைமுகமாக நிதியுதவி அளித்து அவர்கள் வாயை மூட பேரம் நடப்பதாகவும் தகவல். ஆனால் போன அப்பா திரும்ப வருவாரா?

லாக்அப் மரணங்கள் நமது நாட்டிற்குப் புதியவை அல்ல. குற்றவாளிகளை விசாரிக்க மூன்றாம்தர விசாரணை முறைகளைக் கையாள்வதும் புதிய விஷயமல்ல. லாக்அப் மரணங்கள் நிகழாத பகுதி நமது நாட்டில் இல்லை. ஆனால், எல்லா நேரங்களிலும் மக்கள் போலீசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதில்லை.

கோவையில் குழந்தைகள் ரித்திக், முஸ்கான் ஆகியோரைக் கொன்ற கொலையாளி மோகன்ராஜை (அவன் பெயரும் மோகன்ராஜ் தான்) போலீசார் போலிமோதலில் கொன்றபோது அதை மக்கள் ஆதரித்தனர். அதே மக்கள்தான், திருப்பூரில் பனியன் வியாபாரி மோகன்ராஜ் கொல்லப்பட்டதை எதிர்த்து சாலையை மறித்தார்கள். திருப்பூரில் போலீசாரின் அத்துமீறல்கள் தொடர்கதையாக இருந்ததால் தான் மக்கள் தார்மிக ஆவேசத்துடன் போராடத் துணிந்தார்கள். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்ததை போலீசார் பெருமையாகக் கருதிவிடக் கூடாது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட சுப்பிரமணியம் என்ற இளைஞர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இறந்தார். அந்த நிகழ்வை நஷ்டஈடு நாடகம் நடத்தி எப்படியோ மூடி மறைத்தனர் போலீஸôர். 2010ல் போலீஸ் இன்ஸ்பெக்டரே லஞ்சம் வாங்கியதை விடியோ பதிவு செய்த சுப்பிரமணியம் என்பவர் இதே காவல்நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அவர் அன்று உயிர் தப்பினார்.

அதே ஆண்டு திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் அடிதடி தகராறுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் சக்திவேலின் காலினை 'விசாரணை' என்ற பெயரில் உடைத்தனர் போலீசார். இன்றும் அந்த இளைஞர் நடைபிணமாகத் தான் இருக்கிறார். ÷உயர் நீதிமன்ற உத்தரவால், அவ்வழக்கில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், சித்திரவதைக்கென்றே கட்டப்பட்டது போல, திருப்பூர் ஊரக காவல்நிலையம் நல்லூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்குதான் சக்திவேலின் கால் உடைக்கப்பட்டது; மோகன்ராஜும் கொல்லப்பட்டிருக்கிறார்.

சட்டத்தின் காவலர்களான போலீசாருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை யார் தந்தது? போலீசார் குறித்த மக்களின் அச்ச உணர்வே அவர்களுக்கு இந்த விபரீதத் துணிச்சலை அளிக்கிறது. அவர்களது பணிப்பளுவும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும், லாக்அப்பில் கதறிய மோகன்ராஜின் பரிதாபமான குரலும் கூடவா போலீசாரை சிந்திக்கச் செய்யாது? பணி முடிந்து வீடு திரும்பும் போலீசாரின் வீடுகளிலும் மனைவி, குழந்தைகள் தானே காத்திருப்பார்கள்?

இன்னொரு விஷயம், மக்களின் அறியாமை. குற்றவியல் விசாரணை சட்டப்படி, கைது செய்யப்பட்ட எவரையும் 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும். இது தெரியாததால் தான், போலீஸôர் மோகன்ராஜை இழுத்துச் சென்று விசாரித்த காவல்நிலையங்களுக்கெல்லாம் அவரது குடும்பம் தொடர்ந்து சென்றிருக்கிறது- எப்படியும் விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில். ஒரு லட்சாதிபதியாகவோ, அரசியல்வாதியாகவோ மோகன்ராஜ் இருந்திருந்தால் இந்நிலை அக் குடும்பத்துக்கு நேரிட்டிருக்குமா?

இதுபோன்ற லாக்அப் மரணங்களுக்கு கடிவாளமாக 1996ல் உச்சநீதிமன்றம் டி.கே.பாசு (எதிர்) மேற்கு வங்க அரசு வழக்கில் 11 கட்டளைகளைப் பிறப்பித்தது. கைது செய்யப்பட்டவரின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் லாக்அப் மரணங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

உச்சநீதிமன்றம் அளித்த அந்த உத்தரவு, 'சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாகரிக சமுதாயத்தில் மிக மோசமான குற்றம் லாக்அப் சாவு' என்று வர்ணித்தது. நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? அல்லது நாம் நாகரிகமான சமுதாயம் இல்லையா? குழந்தை ரேணுகா அழுதுகொண்டிருக்கிறாள். அவளது அப்பா கொல்லப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அவளது அழுகையை நிறுத்த நமது அரசால் முடியுமா? வேடிக்கை பார்க்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்?

.

No comments:

Post a Comment