Wednesday, September 28, 2011

புதுக்கவிதை - 144


அபத்தம்


மூக்கு முட்ட சாப்பிடும்
தொழிலாளர்நல ஆய்வாளர்.

ஏக்கத்துடன் இலைஎடுக்கும்
குழந்தைத் தொழிலாளி.

.

Saturday, September 17, 2011

எண்ணங்கள்


மரத்துப் போய்விட்டனவா நமது வெட்க நரம்புகள்?



மனித உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் நரம்புகள் நம்மிடையே மரத்து வருகின்றனவோ என்ற சந்தேகம், அண்மையில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது எழுந்தது. இதற்குக் காரணம், அந்தப் பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு திரைப்படக் காட்சி.

பேருந்து நிறைய பயணிகள் கூட்டம். பணிகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், கல்வி பயிலச் செல்லும் மாணவ மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் கூட்டம் பேருந்தில் அடைந்திருந்தது. நிற்கவே இடமற்ற அந்தப் பேருந்தில்தான் ஒளிபரப்பானது கற்பழிப்புக் காட்சி.

ஒரு பெண்ணை நான்கு முரடர்கள் பலவந்தப்படுத்தும் காட்சி. பேருந்தில் அனைவருக்கும் உச்சஸ்தாயியில் கேட்கிறது அந்தப் பெண்ணின் கதறல். முந்தைய காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாசூக்கான காட்சியமைக்கில் வக்கிரமின்றி சுருக்கமாக முடித்துக் கொள்வார்கள். இந்தப் படத்திலோ, யதார்த்தம் என்ற பெயரில் பல நிமிடங்களுக்கு இந்த வல்லுறவுக் காட்சி நீண்டது.

பேருந்தில் பயணித்த பெண்கள் நெளிந்தார்கள். ஆண்களும் கூட இதைக் காண சகிக்காமல் தத்தளித்தார்கள். ஆயினும் சில இளைஞர்கள் எந்தக் கூச்சமும் இன்றி இக்காட்சியை ரசித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தின் நடத்துநரோ இவை எதையும் கண்டுகொள்பவராக இல்லை.

இதை எதிர்த்துக் கேட்கவும் திராணியின்றி, கேட்டால் யாரேனும் தவறாகக் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் வேடிக்கை பார்க்க, ஒரேயொரு மூதாட்டி திடீரென கர்ஜித்தார்.

"பொம்பளைங்க இந்த பஸ்சில் வர்றதா, வேண்டாமா? இங்கு யாருக்குமே புத்தி இல்லையா?' என்ற அவரது ஆவேசம், அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் ஒளிபரப்பான திரைப்படக் காட்சியை நிறுத்தியது.

சுமார் 80 பேர் பயணித்த பேருந்தில் ஒரேயொரு பயணிக்குத் தான் அந்தத் தார்மிக ஆவேசம் வந்திருந்தது. ஏன் பிறருக்கு அந்த நியாயமான கோபம் வரவில்லை? சிந்தித்துப் பார்த்தால் நமது கலாச்சார வீழ்ச்சியின் அபாயம் புரிகிறது.

வெட்கம், நாணம், கூச்சம் போன்றவை ஆறறிவு படைத்த மனிதருக்கே உரித்தானவை. பிற உயிரினங்கள் இவற்றை வெளிப்படுத்துவதில்லை. மனிதரின் பண்பாட்டுயர்வு தீய செயல்களுக்கு நாணுவதில் தான் வெளிப்படுகிறது.

அதேபோல, இருட்டில் நடக்க வேண்டிய இல்லற நிகழ்வுகளை பொது இடங்களில் வெளிப்படுத்தத் தயங்கும் கூச்சமும் வெட்கமும், மனிதரின் உன்னத நிலையாக விளங்கி வந்திருக்கின்றன. இவைதான் அண்மைக்காலமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படங்கள் தணிக்கைத்துறையின் கண்டிப்புக்கு அஞ்சி பல காட்சிகளை வெட்டியதுண்டு. இன்றோ, வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய திரைப்படங்கள் கூட "யு-ஏ' சான்றிதழ்களுடன் வெளியிடப்படுகின்றன. அது எப்படி இருவித பிராயத்தினருக்கும் ஏற்றதாக ஒரு படம் சான்றிதழ் பெற முடியும்? இதைத் தட்டிக் கேட்க, வெட்க நரம்புகள் வேலை செய்யும் ஒருவர்கூட திரைப்படத் தணிக்கைத் துறையில் இல்லை.

வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய "ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை இரவு 11.00 மணிக்கு மேல் தான் தொலைக்காட்சிகளில் திரையிட முடியும். ஆனால், இந்த "யு-ஏ' சான்றிதழ்க் கோளாறு காரணமாக, இத்தகைய பாலியல், வன்முறை கலந்த படங்கள் பகல் நேரத்திலேயே நமது வீடுகளில் வலம் வருகின்றன.

இத்தகைய அனுபவமே, பேருந்தில் நிகழ்ந்த அத்துமீறலை பலரும் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் என்று தோன்றுகிறது. இரவுநேர சல்லாபங்களின் விரக தாபங்களையும், உணர்ச்சியோலங்களையும் பாடல்களில் புகுத்தும் நமது இசையமைப்பாளர்களைக் கண்டிக்காமல், திரையிசைப் பாடல்களை நாம் கூச்சமின்றிக் கேட்டு மகிழவும் இதுவே காரணம்.

பொது உபயோகத்துக்கான பேருந்துகளில் ஒளிபரப்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு வரையறை உள்ளது. இத்தகைய உண்ர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்புவது, விபத்துக்கும் குற்றங்களுக்கும் வழிவகுக்கலாம். ஆனால் இதை ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளிடமும், வெட்க நரம்புகள் வேலை செய்வதில்லை.

சமுதாயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்க, நாணமற்ற தன்மையே காரணமாக உள்ளது என்கின்றனர் மனோவியல் வல்லுநர்கள். உண்மையில் நாணமும் வெட்கமும் நம்மைக் காக்கும் கவசங்கள்; அவை நம்மை பிற்போக்குத்தனத்தில் தள்ளுபவை அல்ல. ஆனால், நமது வெகுஜன ஊடகங்களும் கருத்துருவாக்கும் முற்போக்கு அறிவுஜீவிகளும் கட்டற்ற நுகர்வு கலாசாரமே சிறந்தது என்று கருதுகிறார்கள். அதையே சாமானியரும் தொடர்கிறார்கள்.

மொத்தத்தில், இங்கு யாருக்கும் வெட்கமில்லை. நமது கலாச்சாரம் வீழ்ச்சியுற்றாலும், சொந்த சகோதரர்கள் துயரத்தில் மாய்ந்தாலும், ஊழல் வெள்ளம் தலைக்கு மேல் பாய்ந்தாலும், யாருக்கும் கவலையில்லை.

ஆபாசச் சுவரொட்டிகளை எந்தத் துணுக்குறலும் இன்றிக் கடக்கும் மனநிலையே எங்கும் தொடர்கிறது. தார்மீக ஆவேசத்துக்கும், வெட்க நரமóபுகளுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகவே தெரிகிறது.

நமது பண்டைய இலக்கியங்கள் அகம்- புறம் என்றும், களவு- கற்பு என்றும் பாகுபடுத்திய மனித வாழ்க்கையின் சிறப்பு, கலாச்சாரச் சீரழிவால் காணாமல் போகிறது. இனியும் நமது வெட்க நரம்புகள் வேலை செய்யாவிட்டால், சமுதாயமே நரம்புத் தளர்ச்சியால் நலிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது.

நன்றி: தினமணி  (09.09.2011)

Friday, September 9, 2011

எண்ணங்கள்

வாழ்வை இனிதே ருசிக்க
கொண்டாடுவோம் திருவோணம்!



(மகாபலிபுரம் சிற்பக்காட்சி)

நமது பண்பாடு மிகப் பழமையானது. அதிலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என தனித்த குணாசிசயங்களுடன் கூடிய பண்டிகைகள் உள்ளன. தமிழகத்தில் பொங்கல் திருவிழா, கர்நாடகாவில் தசரா, ஆந்திராவில் யுகாதி, பஞ்சாபில் பைசாகி திருவிழா, வங்கத்தில் துர்க்கா பூஜை, மகாராஷ்டிராவில் கணேச சதுர்த்தி, வடமாநிலங்களில் ஹோலி, காஷ்மீரில் ஜிரி மேளா... என பண்டிகைகள் பலவிதம். இவை அனைத்தின் நோக்கம், மக்களைப் பிணைப்பதும், வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்துவதுமே.

அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, அலாதியான சிறப்புகளுடன் மலையாள மக்களை மகிழ்விக்கிறது.

தன்னகந்தையால் அழிந்த மகாபலி மன்னனுக்கு திருமால் அளித்த வரத்தின் பயனாக, ஆண்டுக்கு ஒருமுறை தனது நாட்டு மக்களின் நலத்தை அறிய மகாபலி சக்கரவர்த்தியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம். அவரை வரவேற்க கேரளம் முழுவதும் வண்ணக்கோலமாக மாறும் அழகே அழகு.

சிவன் கோவிலில் அணையும் நிலையிலிருந்த விளக்கின் திரியைத் தூண்டி எரியச் செய்த எலிக்கு புண்ணியம் கிடைத்தது. அது அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த எண்ணமே, ஆலயப் பணிகளில் மக்களை ஊக்கமுடன் ஈடுபடுத்துவதாக உள்ளது.

நல்லாட்சிக்கு இலக்கணமாக நாட்டை ஆண்டுவந்த மகாபலி, தானத்தில் சிறந்தவராகவும் விளங்கினார். நாடி வந்தவர்களுக்கு இல்லையென மறுக்காமல் தானம் செய்வதே மகாபலியின் இயல்பு. இவரால் போரில் வெல்லப்பட்ட தேவர்கள் திருமாலைச் சரணடையவே, வாமன அவதாரம் எடுத்து மகாபலியை சம்ஹாரம் செய்தார் என்று பாகவதம் கூறும். எத்தகைய வீரனும் அகந்தையால் அழிவான் என்பதையும் மகாபலியின் வாழ்க்கை நமக்கு காட்டுகிறது.

எனினும், தனது தான தர்மத்தின் வலிமையால் இறைவனிடம் அவர் பெற்ற வரமே, அற்புதமான ஓணம் பண்டிகையை நாம் கொண்டாட வழிவகுத்திருக்கிறது. மூன்றடி நிலம் கேட்ட குறுமுனியின் தந்திரத்தை அறிந்தும், வாக்குத் தவறா வாய்மையின் இலக்கணமாக, தாரை வார்த்தார் மகாபலி. வாமனன் திரிவிக்கிரமனாக வளர்ந்து வானையும் பூமியையும் அளந்து நின்றபோது, தனது தலையையே மூன்றாம் அடிக்குக் கொடுத்து, மலையாள நாயகன் ஆனார்.

அன்று அவர் இறைவனிடம் கேட்ட வரமும் கூட மக்கள்நலம் சார்ந்ததாகவே இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கான பாடம். தனது மக்கள் நலமாக இருக்கிறார்களா என்று காண வரும் மன்னனை மகிழ்விக்க விழா கொண்டாடி தாமும் மகிழ்கிறார்கள் மக்கள். மக்கள் நலனை விரும்பும் மன்னன்! மன்னன் சந்தோஷமாகத் திரும்ப வேண்டும் என்று விரும்பும் மக்கள்!

ஓணம் திருவிழாவுக்கே உரித்தான ஓணம் சத்ய விருந்து, அத்தப் பூக்களம், ஓணக்களி, வள்ளம்களி ஆகியவை கேரளத்தின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இந்நிகழ்வுகளில் களிக்கும் தம் மக்களைக் கண்டு மகிழ்ந்து ஆசி அளித்து பாதாளம் திரும்புகிறார் மகாபலி.

இந்த விழாவின் இனிய நினைவுகளுடன் அடுத்த ஆண்டு வரை உழைப்பதற்கான உற்சாக ஊற்று எங்கும் பரவுகிறது. நமது முன்னோர் வாழத் தெரிந்தவர்கள். வாழ்வை இனிமையாக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் வழியில் நாமும் கொண்டாடுவோமா திருவோணம்?

நன்றி: தினமணி - கோவை (ஓண நிலாவு- விளம்பரச் சிறப்பிதழ்- 08.09.2011 )

Thursday, September 1, 2011

எண்ணங்கள்


 

பாரதம் எழுதிய 
முதல்வோன்

நமது நாட்டில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பல முதன்மைகள் உண்டு. மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை மகரிஷி வியாசர் சொல்லச் சொல்ல எழுதிய முதல் எழுத்தாளர் இவரே. பல லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதம், விநாயகரின் உடைந்த தந்தத்தால் எழுதப்பட்டது என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் விநாயகப் பெருமானை வணங்கித் துவக்குவது நமது மரபு. திரிபுர அரக்கர்கள் மீது போர் தொடுத்த ஈசன், விநாயகரை மறந்ததால் அவரது தேரச்சு முறிந்த கதையை விநாயக புராணம் கூறுகிறது. இன்றும் "பிள்ளையார் சுழி'யுடன் கணக்குப் பதிவேடுகள் துவங்குவதைக் காண்கிறோம்.

இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் வழிபடப்படும் பிரிய தெய்வமாகவும் விநாயகர் விளங்குகிறார். சைவக் கோவில்களில் கணபதியாக வீற்றிருக்கும் விநாயகர், வைணவக் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வாராக அருள்பாலிக்கிறார். தனது வாஞ்சையான தரிசனம் மூலமாக, இருமதப் பிரிவினரையும் அரவணைப்பது கணநாதரின் சிறப்பு. 

விநாயகரின் திருவிளையாடல்கள் குறித்த கதைகள், அவர்மீதான அபிமானத்தால் எழுந்தவை. தமிழ்க்கடவுள் குமரனின் அண்ணனாகவும், சிவ- சக்தி மைந்தனாகவும், மால் மருகனாகவும் கருதப்படுவதால்தான் சமய ஒருமைப்பாட்டை இவரால் எளிதாகக் கொண்டுவர முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறுசமய வழிபாடாக ஆதிசங்கரரால் வழிபாட்டு முறைகள் தொகுக்கப்பட்டபோது, "கணாபத்யம்' என்ற முறையை அதில் இணைத்தார். இதிலிருந்து, இவ்வழிபாட்டு முறையின் பழமை தெரிய வருகிறது. கணபதியை முதற்கடவுளாக வழிபடுவதே கணாபத்யம் ஆகும். இன்றும், தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும், பிள்ளையார் கோவிலைக் காண முடியும்.

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் காட்சிக்கு எளியவராக வீற்றிருக்கும் விக்னேஸ்வரரையே குழந்தைகள் கடவுளாக முதலில் அறியத் துவங்குகின்றன. மழலைகள் விரும்பும் யானைமுகம் கொண்டிருப்பதே அவரை நோக்கி புதிய பக்தர்களை ஈர்ப்பதாக உள்ளது.

குடகிலிருந்து தமிழகம் நோக்கி 'காவிரி' நதியைப் பாயவிட்டவர் கணேசனே என்று புராணம் கூறும். காக்கையாய் வந்து தமிழ்முனிவர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து மக்களின் தாகம் தீர்த்தவர் விநாயகர்.

நாட்டில் விநாயகப் பெருமானுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், கணேச உற்சவத்தை முன்னெடுத்து அதன்மூலமாக மக்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்தார்.  அவரது வெற்றியைத் தொடர்ந்தே, தனது அரசியல் இயக்கத்தை ஆன்மிக அடிப்படையில் அமைத்தார், மகாத்மா காந்தி. "கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- குணம் உயர்ந்திடவே, விடுதலை கூடி மகிழ்ந்திடவே'' என்று, திலகரின் சீடர் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.

கொழுக்கட்டையும் தோப்புக்கரணமும் கணபதிக்குப் பிரியமானவை. இவ்விரண்டுமே பக்தர்களின் உடல்நலனை மேம்படுத்த வல்லவை. கணபதிக்கு அர்ச்சிக்கப் பயன்படுத்தப்படும் அருகம்புல்லும் வெப்பம் குறைக்கும் அரிய மூலிகை.

இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில், அந்தத் தூயவனை வணங்கி, நாடு நலம்பெற பிரார்த்திப்போம். கணநாதர் அருள் இருந்தால் தடைகள் அகலும்; தன்னம்பிக்கை பெருகும். வினைகள் ஒழியும்; நம் வாழ்வும் ஒளிரும்.


நன்றி: தினமணி  (விநாயக சதுர்த்தி சிறப்பிதழ்)
.