Wednesday, January 26, 2011

எண்ணங்கள்



காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்

1932- சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் அணிவகுத்து முன்னேறிய விடுதலைவீரர்களின் ஊர்வலம் காவலர்களால் தாக்கப்பட்டது. மூவண்ணக் கொடியைத் தாங்கி முன்னேறிய குமாரசாமி என்ற இளைஞர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவர் கரத்திலிருந்த மூவண்ணக் கொடியை அகற்ற முடியவில்லை. அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்து, கொடிகாத்து, திருப்பூர் குமரனாக சரித்திரத்தில் இடம் பெற்றார் அந்த இளைஞர்.

திருப்பூர் குமரன் தாங்கிய கொடி, அந்நாளில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியின் கொடி. அதுவே பின்னாளில் நமது மூவண்ண தேசியக்கொடிக்கு ஆதாரமானது. அதே காங்கிரஸ் கட்சி, இன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை அரசியல் விளையாட்டு என்று வர்ணிப்பது, காலத்தின் கோலமோ?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வின் சின்னமாக விளங்கிய காங்கிரஸ் இன்று, அந்த அடையாளத்தை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் தத்துக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது. பா.ஜ.க.வோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் காங்கிரஸின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக, புலிவாலைப் பிடிக்கவும் தயாராக இருக்கிறது.

அண்மைக்காலமாக பிரிவினைவாதிகளின் பிடியில் தவிக்கும் காஷ்மீரில், சுதந்திரதினம், குடியரசு தினங்களில் நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதைவிடக் கொடுமை, அங்கு தேசிய தினங்களில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றி பிரிவினைவாதிகள் எக்காளமிடுவதுதான்.

கடந்த ஓராண்டாக, ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அங்கு பிரிவினைப் பிரசாரம் ஓங்கி இருக்கிறது. முதிர்ச்சியற்ற முதல்வர் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது. இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் தவிர்த்து, மத்திய அரசும் தன் பங்கிற்கு நிலைமையை சிக்கலாக்கியது.

இந்நிலையில் தான், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக பா.ஜ. யுவமோர்ச்சா அறிவித்தது. இதற்கென ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரையை (தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை) அதன் தலைவர் அனுராக் தாகூர் கொல்கத்தாவிலிருந்து துவக்கினார்.
பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி அங்கு தேசியக்கொடி ஏற்றுவதை அரசு தவிர்ப்பதை அடுத்தே, இந்த அரசியல் போராட்டத்தை பா.ஜ.க. அறிவித்தது. சென்ற குடியரசு தினத்தன்று லால்சவுக்கில் நமது தேசியக்கொடி எரிக்கப்பட்டதை பா.ஜ.க. சுட்டிக்காட்டியது.

மாநில முதல்வரே அங்கு தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவித்து, இந்த அரசியல் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் அடைவதைத் தடுத்திருக்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, இதை கௌரவப் பிரச்னையாக்கி, தேசியக்கொடி ஏற்றுவதையே சவாலான விஷயமாக்கிவிட்டன.

ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள சூழலில் குடியரசு தினத்தை சிக்கலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஓமர், பா.ஜ.க.வினர் லால்சவுக் வர அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் சீலிடப்பட்டது.

தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், இதை பா.ஜ.க. அரசியலாக்குவதாகக் குறைப்பட்டார். அவரும் கூட, தேசியக்கொடி ஏற்றுவது எப்படி பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் என்று விளக்கவில்லை. பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதிகளை அடக்குவதாக இல்லாமல், அவர்களது செயல்முறையை ஆதரிப்பதாகவே தோற்றமளிக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதைவிட வியப்பளிப்பது, கர்நாடகாவிலிருந்து ஜம்மு சென்ற பா.ஜ.க. தொண்டர்கள் பயணித்த ரயில் மகாராஷ்டிராவில் மறிக்கப்பட்டு, ரயில்பெட்டி இணைப்பைத் துண்டித்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பியதுதான். இறுதியில், கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு, பா.ஜ.க.வின் தேசியக் கொடியேற்றும் முயற்சியை தடுத்திருக்கிறது மாநில அரசு.

ஜம்மு காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துவதில் அதிசயமில்லை. ஏனெனில், பா.ஜ.க.வின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் அங்கம் என்று நிலைநாட்டுவதற்காக 1953-ல் காஷ்மீர் நுழைவுப் போராட்டம் நடத்தி, கைதாகி, சிறையிலேயே உயிரிழந்தவர்.

சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ உரிமைகள் அன்றைய பிரதமர் நேருவால் வழங்கப்பட்டன. அதன் பயனாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் அம்மாநில பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். காஷ்மீர் மாநில அரசுக்கு தனிக்கொடியும் இருந்தது. அம்மாநிலத்திற்குள் ஜனாதிபதியே நுழைய வேண்டுமாயினும் காஷ்மீர் பிரதமர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த இரட்டை நிலைகளை மாற்றியது சியாம பிரசாத் முகர்ஜியின் உயிர்த் தியாகம்தான்.

இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதில் முகர்ஜியின் பங்களிப்பு மறுக்க இயலாதது. எனவேதான், பிரிவினைவாத அமைப்பு ஒன்று லால்செüக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றுமாறு சவால் விடுத்தபோது, அன்றைய பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதையேற்று, குமரி முதல் ஸ்ரீநகர் வரை ஏக்தா யாத்திரை சென்று 1992 குடியரசு தினத்தில் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றினார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுமுகமாக இருக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதேநேரம், பிரிவினைவாதிகள் திட்டமிட்ட ரீதியில் முறியடிக்கப்பட்டனர். அம்மாநிலத்தை வெறும் நிலமாக பாவிக்காமல் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பா.ஜ.க.வின் வழிமுறை.

இதற்கு மாறாக தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இயங்குவதே பிரச்னைகளுக்கு காரணம். இதன்மூலமாக, பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதில் துணிவின்மையை மட்டும் காங்கிரஸ் கட்சி காட்டவில்லை. தேசிய உணர்வு என்னும் அடையாளத்தையும் பா.ஜ.க. பறித்துச் செல்ல அனுமதித்துவிட்டது.

பிரிவினைவாதிகள் உச்சபலத்துடன் இயங்குகையில் அவர்களுக்கு மேலும் வாய்ப்பு ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வின் இந்த யாத்திரை இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தேசிய விழிப்புணர்வில் காங்கிரஸ் பின்தங்கி இருப்பதை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாகவே தேசியக்கொடி ஏற்றுவதை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.

மொத்தத்தில் சொந்த நாட்டிற்குள்ளேயே தேசியக் கொடி ஏற்றுவதை கௌரவப் போராட்டமாகவும், அதைத் தடுக்க முனையும் அரசுகளின் அத்துமீறல்களாகவும் காணும் பாக்கியத்தை, வைரவிழா காணும் குடியரசு நமக்கு வழங்கி இருக்கிறது.

நல்லவேளை, திருப்பூர் குமரன் இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், இதற்காகவா நாம் தடியடி பட்டோம் என்று நொந்து, நம்மை சபித்திருப்பார். இதற்காகத் தான் அன்றே ஆங்கில அரசால் அடிபட்டுச் செத்தாயா திருப்பூர் குமரா?

No comments:

Post a Comment