Friday, June 11, 2010

ஏதேதோ எண்ணங்கள்


செம்மொழி மாநாட்டை நோக்கி.. 11

இதழ்களின் மௌனம்

கடந்த இரண்டு மாதங்களாக, தமிழ் ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றிய முன்னோட்டச் செய்திகளை வாரி வழங்கி வருகின்றன. சில பத்திரிகைகள் திகட்டத் திகட்ட இச்செய்திகளை வழங்குவதற்கு உள்நோக்கமுண்டு. விளம்பர வருவாய் பெருக்க வாராது வந்த மாமணியாகவே இம்மாநாட்டை அவை கருதுகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு, உள்ளாட்சி விளம்பரங்களை அள்ளி வருவாய் ஈட்டுவதே ஊடகங்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.

முன்னணி தமிழ் நாளிதழ்களைக் கண்ணுறும் யாரும் இதை உடனே புரிந்துகொள்ள முடியும். தினசரி, செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த செய்திகள் பிரதானப் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதை ஒவ்வொரு அமைச்சரும் வரிசையாக வந்து ஆய்வு செய்கின்றனர்; செய்தி ஆகின்றனர்.

செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் தார்ச்சாலை புதுப்பிப்பதை ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வொரு வகையாக பிரசுரிக்கிறது. மாநாட்டுக்காக வரையப்படும் ஓவியங்கள், நாளிதழ்களின் வண்ணப் பக்கங்களில் கண்டிப்பாக இடம் பெறுகின்றன.

மாநாட்டு பந்தல் அமைப்பு, நீண்ட தொடர் ஓட்டங்கள், முகாம் நோக்கப் பாடல் வெளியீடு, மாநாட்டுத் தோரண வாயில்கள், பேரணியில் இடம் பெறும் அலங்காரச் சிலைகள் தயாரிப்பு, மாநாட்டுக்காக நடைபெறும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், ... இவை தான் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே செய்தி என்பது போல, அரைத்த மாவையே அரைக்கின்றன வெகுஜன ஊடகங்களும் மின்னணு ஊடகங்களும்.

விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. தினமணி நாளிதழ் செம்மொழி மாநாட்டை வரவேற்றாலும், தலையங்கப் பக்கத்தில் செய்ய வேண்டிய கடமைகளை அரசுக்கு நினைவூட்டத் தவறுவதில்லை. தமிழ்வழிக் கல்வி குறித்த தினமணி தலையங்கம் (இந்த வசை எய்திடலாமோ - 5.6.10) சரியான நேரத்தில் வெளியானது. இதைப் படிக்க, செம்மொழி மாநாட்டு கிறுகிறுப்பில் இருக்கும் முதல்வருக்கு நேரம் இருக்குமா என்று தான் தெரியவில்லை.

இதே போன்ற அரிய கடமையை காலச்சுவடு மாத இதழ் செய்துள்ளது. இம்மாத இதழில் வெளி ரங்கராஜன் எழுதியுள்ள 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ்ப் படைப்பாளிகளும்' கட்டுரை அற்புதம். 'குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?' என்று கேட்க இப்போதும் சில கம்பர்கள் உள்ளார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது.

சோ ராமஸ்வாமி அவர்களின் துக்ளக் மட்டும் வழக்கம் போல நையாண்டியுடன் செம்மொழி மாநாட்டை விமசித்து வருகிறது. மற்றபடி எந்தப் பத்திரிகையும் இதை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. இது ஊடகங்களை நம்பியுள்ள மக்களை ஏமாற்றுவதாகும் என்பதை ஏனோ அத்துறையினர் உணரவில்லை.

செம்மொழி மாநாடு நடத்துவதாக முதல்வர் அறிவித்த நேரம், இலங்கையில் குழப்பம் நிலவிய நேரம். தமிழ் ஈழக் குழப்பத்திலிருந்து தமிழக அரசியலை மீட்டெடுக்க முதல்வர் கருணாநிதி ஏவிய அஸ்திரம் தான் இது. உலகத் தமிழ் மாநாடு நடத்துவதாக தன்னிச்சையாக அறிவித்து, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்திடம் மூக்குடைபட்டு, பிறகு சாதுர்யமாக அறிவித்தது தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. இதை ஆரம்பத்திலேயே அ.தி.மு.க, தலைவி ஜெயலலிதாவும், ம.தி.மு.க, தலைவர் வைகோவும், நெடுமாறனும் கண்டித்தனர். அவர்கள் முதல்வரின் அரசியல் வைரிகள் என்பதால் அந்த எதிர்ப்புகள் ஒதுக்கப்பட்டன.

மொழிப்பற்று என்ற வகையில் பலரும் இதை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டனர். அரசை அண்டிப் பிழைக்கும் அறிஞர் குழுக்களுக்கு இது நல்ல நிலாக்காலம். அவர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். சீட்டுக்கவிஞர்களுக்கு இது நல்ல மழைக்காலம். அவர்களும் தங்கள் கடமையை செவ்வனே செய்கின்றனர். அரசியல்வாதிகள் அவர்களுக்கே உரிய காற்றுக்காலமாக இதைக் கருதி தூற்றிக் கொள்கின்றனர்- வளர்ச்சிப் பணிகள் மூலமாக.

இந்நிலையில், ஊடகங்களை மட்டும் குற்றம் சொல்வதில் பொருளில்லை. ஆயினும், 'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்ற திருநாவுக்கரசர் வாழ்ந்த மண்ணில், 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை' என்ற மகாகவி பாரதி பிறந்த மண்ணில், அரசியல் சுயலாபத்துக்காக நடத்தப்படும் மாநாடு குறித்து இவ்வளவு புளகாங்கிதம் அடைய வேண்டுமா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதழ்களின் மௌனம் சங்கடப்படுத்துகிறது.
.

No comments:

Post a Comment