Thursday, May 27, 2010

வசன கவிதை - 57






தீர்வுகளில் திளையுங்கள்!



திரைப்படங்களிலும்
பொது இடங்களிலும்
கேவலப்படுத்தப்படும்
அலிகளுக்கு விமோசனம் -
'திருநங்கையர்' என்று
திருத்தியாகி விட்டது.

முச்சந்திகளிலும்
நடைமேடைகளிலும்
தடுமாறும்
ஊனமுற்றோருக்கும்
விமோசனம் -
'மாற்றுத் திறனாளிகள்' என்று
மாற்றியாகி விட்டது.

அண்டை மாநிலம்
நதிநீரை மறுத்தால்
திரையுலகப் பேரணி
விழிநீரைத் துடைக்கும்.

இலங்கை முதல்
மலேசியா வரை
உலகம் முழுவதும்
தமிழர்கள் தவிப்பு;
'செம்மொழி' மாநாட்டில்
கிட்டிவிடும் தீர்வு.

ஒவ்வொரு துறையிலும்
உறிஞ்சப்படும் உழைப்பு;
திக்கற்ற அனைவருக்கும்
வாரியங்கள்
அமைத்தாகி விட்டது.

ஒன்றான குடும்பத்தால்
ஊழல் மறந்தது போல -
எல்லா பிரச்னைகளுக்கும்
என்னிடம் உண்டு
முடிவு.

.

1 comment:

சுஜா செல்லப்பன் said...

ரொம்ப நல்லா இருக்கு வசன கவிதை...

ஆழமான கருத்துக்கள்...பாராட்டுக்கள்..

Post a Comment